Sunday, November 8, 2009

என் தனிமையை நான் கடந்துவிட தவிக்கிறேன்..


என் தனிமையை நான் கடந்துவிட தவிக்கிறேன்..
தட்டப்ப்படாத கதவுகளை அடிக்கடி திறந்து
வராத யாரையோ தேடுகிறேன்..
வெறுமையான வாசலை வெறித்து பார்த்துவிட்டு
மீண்டும் திரும்பி உள்ளே நடக்கிறேன்..
சுவற்றில் சாய்கிறேன்..
கட்டிலில், நாற்காலியில், தரையில்,
மாறி, மாறி அமர்கிறேன்..
கேட்பாரற்று ஓடும் தொலைக்காட்சி பிம்பங்களுடன்
பேச்சுவார்த்தை நடத்துகிறேன்..
விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்..
கனவில் முகம் தெரியாத வெள்ளை உருவத்தின்
துரத்தலுக்கு பயந்து ஓடுகிறேன்,
பிரிந்துபோன உறவுகளுடன் பேசுகிறேன்
அல்லது அவர்களுடன் பேசவேண்டும் என்று
முடிவு செய்து கொண்டே கனவு காண்கிறேன்..
அறையெங்கும் பரவிக்கிடக்கும்
மௌனத்தை உடைத்தெறிய நினைத்து
எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்,
சிரிக்கிறேன், அழுகிறேன்,
சிலநேரங்களில் கூச்சலிடூகிறேன்..
யாருமே அழைக்காத தொலைபேசியை எடுத்து
யாருடனோ பேச நினைத்து
எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்..
என் மனதில் என்ன ஓடுகிறது?
நான் என்ன நினைக்கிறேன்?
நான் எதைப்பற்றி யோசிக்கிறேன்?
என்பது பல சமயங்களில் எனக்கு விளங்குவதில்லை..
விவரிக்கமுடியாத என் தனிமையை
யாரிடமாவது விவரிக்க எண்ணியே
இந்த காகிதத்தில் கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்..
ஆம், துரத்தும் என் தனிமையை
நான் கடந்துவிட தவிக்கிறேன்...!!!

Saturday, October 3, 2009

சாலையில் தெறித்த கடைசி இலை...



தூரத்தில் ஒருத்தி யாரென தெரியவில்லை.
மெல்ல நெருங்கினாள் பழக்கப்பட்ட முகம்.
வேகம் குறைந்த என் கால்கள் லேசாக
தடுமாறியது.

அருகில் வந்தவள் மெல்ல முகம் பார்த்தாள்.
ஏதோ சொல்ல வாயெடுத்தாள் - நானும் கூட..
வார்த்தைகள் வெளிவரத்தயங்கியது
இருவருக்கும்..

அர்த்தமுள்ள ஆழ்த்த மௌனம்,
அமைதியான சிலநொடி பார்வைகளுக்குப்பின்,
இறுக்கமான நடையுடன் கடந்து சென்றோம்..
தூரம் சென்றபின் திரும்பிப்பார்க்க
தோன்றியது..

அவளுக்கும் கூட தோன்றி இருக்கலாம்..
திரும்பிப்பார்த்தேன் நான் மட்டும்..
தூரத்தில் அவள் மறைத்திருந்தாள்.
பிரிந்துவிட்ட காதலி என்றாலும் கூட
அவளை பார்த்துவிட்ட மகிழ்ச்சி
மனதின் ஏதோ ஒரு மூலையில்..
ஏன் என விளங்காமல் நடந்தேன்..
இதே சாலையில் எங்களை ஒன்றாக பார்த்திருந்த
பட்டுப்போன மரத்தின் காய்ந்துபோன கடைசி
இலையொன்று சாலையில் விழுந்து தெறித்தது ..
எங்களை போலவும் எங்கள் காதலை போலவும்...

முதல் காதல் நினைவுகள்.....


பேசிய பொழுதுகளில் பேசப்படாத ஒற்றை வார்த்தை
எழுதி முடிக்கப்படாத கடைசி கடிதம்
மழை நாளின் முதல் ஸ்பரிசம்
தனிமையின் முதல் முத்தம்
மனதின் ஏதோ ஒரு மூலையில்
மீதமுள்ள முதல் காதல் நினைவுகள்
ஆழ்ந்த மௌனங்களுக்கிடையில்......

காகித காதல்.....

கசக்கி எறியப்பட்ட காகிதம்
காகிதம் இல்லை-காதல்
பிறித்து படிக்க மனமில்லை
நான் எழுதிய கவிதைக்கு
கையொப்பமிட்டவன்
யாரோ என்பதினால்........

Friday, October 2, 2009

இதுதான் வாழ்க்கை.....

இன்றொரு நாளில் நான் நினைத்ததை மட்டும்
இந்த பக்கத்தில் எழுத தோன்றுகிறது.
என்னை போல் ஒருவன் இனி இந்த உலகில் பிறக்க போவதில்லை.
பிறந்தவன் நான் ஒருவனாய் இருக்கையில்,
விலகி நிற்கிறேன் மற்றவர்களிடமிருந்து.
எதையும் மறக்க மனமின்றி தவிக்கிறேன்.
உண்மைக்காதலும் புதைந்தது தடமின்றி கல்லறையில்.
தனிமையே சிறந்தது என கற்றுக்கொடுத்த உனக்கும், இந்த உலகத்திற்கும் விடைகொடுத்து விட்டுச்செல்கிறேன் - என் உடலை மட்டும்.
கல்லறையும் பூவுலகில் தான் என்பதில் வருத்தம் தான்.
என் அழுகையில் துவங்கிய என் வாழ்க்கை
உன் அழுகையில் முடிகிறது...... இதுதான் வாழ்க்கை.....

Tuesday, September 29, 2009

என் தமிழ்...

நிறம் மாறும் நிஜங்களும் நிழலாடும் பொய்களும் நிறைந்திருக்கும் பூமியில் ஏதோ ஓர் மனதின் மூலையில் தயங்கித்தடுமாறும் ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது
என் தமிழ்...

Monday, September 28, 2009

அவளுக்காகவே

பிரிந்துவிட்ட காதலின் வலி மாறாமல்
என்னுள் ரணமாய் இருக்க,
அர்த்தராத்திரியின் அர்த்தமற்ற மௌனங்களின் கேள்விகளுக்கு
விடைதேடி காத்திருக்கிறேன்.
வரமாட்டாள் என தெரிந்திருந்தும் அவளுக்காகவே....