Sunday, November 8, 2009

என் தனிமையை நான் கடந்துவிட தவிக்கிறேன்..


என் தனிமையை நான் கடந்துவிட தவிக்கிறேன்..
தட்டப்ப்படாத கதவுகளை அடிக்கடி திறந்து
வராத யாரையோ தேடுகிறேன்..
வெறுமையான வாசலை வெறித்து பார்த்துவிட்டு
மீண்டும் திரும்பி உள்ளே நடக்கிறேன்..
சுவற்றில் சாய்கிறேன்..
கட்டிலில், நாற்காலியில், தரையில்,
மாறி, மாறி அமர்கிறேன்..
கேட்பாரற்று ஓடும் தொலைக்காட்சி பிம்பங்களுடன்
பேச்சுவார்த்தை நடத்துகிறேன்..
விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்..
கனவில் முகம் தெரியாத வெள்ளை உருவத்தின்
துரத்தலுக்கு பயந்து ஓடுகிறேன்,
பிரிந்துபோன உறவுகளுடன் பேசுகிறேன்
அல்லது அவர்களுடன் பேசவேண்டும் என்று
முடிவு செய்து கொண்டே கனவு காண்கிறேன்..
அறையெங்கும் பரவிக்கிடக்கும்
மௌனத்தை உடைத்தெறிய நினைத்து
எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்,
சிரிக்கிறேன், அழுகிறேன்,
சிலநேரங்களில் கூச்சலிடூகிறேன்..
யாருமே அழைக்காத தொலைபேசியை எடுத்து
யாருடனோ பேச நினைத்து
எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்..
என் மனதில் என்ன ஓடுகிறது?
நான் என்ன நினைக்கிறேன்?
நான் எதைப்பற்றி யோசிக்கிறேன்?
என்பது பல சமயங்களில் எனக்கு விளங்குவதில்லை..
விவரிக்கமுடியாத என் தனிமையை
யாரிடமாவது விவரிக்க எண்ணியே
இந்த காகிதத்தில் கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்..
ஆம், துரத்தும் என் தனிமையை
நான் கடந்துவிட தவிக்கிறேன்...!!!

No comments:

Post a Comment